"கொக்கரக்கோ....!"
கூரையேறிக் கூவல் போடும் சேவல்,
பசும் புல்லுக்காய் படலை தாண்டும் பசுமாடு,
தரைவிழுந்து தலைபிளக்கும் பனம்பழம்,
கள்ளடித்துக் கல்லிடறி பல்லுமுடைக்கும் கோமான்கள்.
பள்ளம் திட்டிகளாய் - சில்லுகள்
பதம் பார்க்கும் பாதைகள்.
மூன்று மாதம் முழுகாதவளாய்,
எம்மூர்ப் பேரூந்து.
வீதிப்புழுதி படைத்திட்ட வீரவரலாறுகள்!
சாணிமெழுகிச் சாந்திட்ட,
வீரைக்கொள்ளியின் விறகடுப்பில்
கள்ளக்கோழியும்; பக்கத்து வேலிப் பாகற்காயுமாய்...
வளர்த்தவன்தன் சாபமும் கொண்டு,
விக்கித் தண்ணீர் தேடுமத்தொண்டைக்குழி.
பனையோலைப் படலைகளும்
குலையிட்ட வாழைகளும்
கோதித்தொங்கும் கொய்யாக்களும்
கொலைகாரக் கொடும் வெயிலுக்காய்,
வேலியோர வெள்ளரியும்
நிலவொளித் தூக்கங்கள்
நிம்மதியான ஏக்கங்கள்
அப்பாவி மனிதர்களும்
அருமையான உறவுகளுமாய்,
அன்றோ,
வசந்த காலமென வாழ்வின் அர்த்தங்கள் பல!
"சொந்த மண்ணும் சொர்க்க வாழ்வும்!"
இன்றோ,
துட்டகைமுனுக்களின் துவம்சிப்பில்
தொலைக்கப்பட்டதாய் என் ஊர்!
புத்தரிச்சோறு;
புளியமரத்தடித் தூக்கம்:
வாய்க்கால் குளியல்:
வரப்பில் சைக்கிளோட்டம்:
விளக்கொளிப் பேச்சுக்கள்;
விடலைத் தோழர்கள்;
திருட்டு மாங்காய்;
திருவிழாக்கோயில்;
உறைப்பு மிளகாயும்;
உடும்பின் கறியுமென,
நாட்கள் நகர்த்திச் சென்றிடினும்
நான் மீண்டுங்காணக் கிடைத்திடுமோ யாவும் ? ? ?

1 comment:
"துட்டகைமுனுக்களின் துவம்சிப்பில்
தொலைக்கப்பட்டதாய் என் ஊர்!"
துட்டகைமுனு எல்லாளனுக்கு சிலையாவது வைத்தான்... ஆனால் இன்று இருந்த பிள்ளையாரையும் காணோமாம் .......
-- பத்திரிகையில் இருக்குது அப்பிடி ---
Post a Comment