Monday, June 25, 2012

ஆக்கிரமிப்பு !




"கொக்கரக்கோ....!"
கூரையேறிக் கூவல் போடும் சேவல்,
பசும் புல்லுக்காய் படலை தாண்டும் பசுமாடு,
தரைவிழுந்து தலைபிளக்கும் பனம்பழம்,
கள்ளடித்துக் கல்லிடறி பல்லுமுடைக்கும் கோமான்கள்.

பள்ளம் திட்டிகளாய் - சில்லுகள்
பதம் பார்க்கும் பாதைகள்.
மூன்று மாதம் முழுகாதவளாய்,
எம்மூர்ப் பேரூந்து.
வீதிப்புழுதி படைத்திட்ட வீரவரலாறுகள்!

சாணிமெழுகிச் சாந்திட்ட,
வீரைக்கொள்ளியின் விறகடுப்பில்
கள்ளக்கோழியும்; பக்கத்து வேலிப் பாகற்காயுமாய்...
வளர்த்தவன்தன் சாபமும் கொண்டு,
விக்கித் தண்ணீர் தேடுமத்தொண்டைக்குழி.

பனையோலைப் படலைகளும்
குலையிட்ட வாழைகளும்
கோதித்தொங்கும் கொய்யாக்களும்
கொலைகாரக் கொடும் வெயிலுக்காய்,
வேலியோர வெள்ளரியும்

நிலவொளித் தூக்கங்கள்
நிம்மதியான ஏக்கங்கள்
அப்பாவி மனிதர்களும்
அருமையான உறவுகளுமாய்,
அன்றோ,
வசந்த காலமென வாழ்வின் அர்த்தங்கள் பல!

"சொந்த மண்ணும் சொர்க்க வாழ்வும்!"

இன்றோ,
துட்டகைமுனுக்களின் துவம்சிப்பில்
தொலைக்கப்பட்டதாய் என் ஊர்!

புத்தரிச்சோறு;
புளியமரத்தடித் தூக்கம்:
வாய்க்கால் குளியல்:
வரப்பில் சைக்கிளோட்டம்:
விளக்கொளிப் பேச்சுக்கள்;
விடலைத் தோழர்கள்;
திருட்டு மாங்காய்;
திருவிழாக்கோயில்;
உறைப்பு மிளகாயும்;
உடும்பின் கறியுமென,

நாட்கள் நகர்த்திச் சென்றிடினும்
நான் மீண்டுங்காணக் கிடைத்திடுமோ யாவும் ? ? ?

Sunday, April 22, 2012

'கொல்!' எனுஞ் சொல்...!!




குத்து! வெட்டு!! கொல்லு!!!
குடங்குடமாய்க் குருதியுறிஞ்சிக்குடி!
கடத்திச் சென்றென்னைக் காணாமலாக்கு.
கல்லோடு கட்டிக்கடலிலும் இடு.
அப்பரல்லவே நானொன்றும்,
தெய்வம் துதித்துத் தெப்பமாய் மிதக்க?
கத்தி கொண்டு கழுத்தறு;
துப்பாக்கி கொண்டென் மீது தோட்டாக்கள் துப்பு.
பிரயோசனமற்றென்னுயிர் பிரியட்டும்!


ஆண்டுகள் பலவாய் அன்னமிட்டு வளர்ப்பாளன்னை - ஓர்
அரிசியேனும் அவித்துத் தராதென்
ஆன்மா பறிக்கும் அருகதை உனக்கேது?
நித்தம் நான் திரட்டிச் சேர்த்த நாட்கள்,
நிமிடத்தில் நீ மிரட்டிக் கொல்வதில் முடியட்டும்!
என்னில் கவலை கொள்ள நீ யார்?
எனைக் கவர்ந்து கொள்ள மட்டுமோர் நாள் பார்!
வாலிபம் கடந்து வயோதிபமும் தொட வேண்டியதோர் வாழ்வு - உன்
வக்கிரத்தால் வறிதாகி
கங்குகளுள் கருகிப்போகட்டும்!


ஆறறிவெல்லாமோர் புறமிருக்க,
ஓரறிவேனுமில்லா அற்பனே!
விதிவிலக்கு சில தவிர்த்து - வேறெந்த
விலங்கினமும், தன்னினம் தானே கொன்று மகிழ்வதில்லை.
மிருகமென்றுமுரைக்க முடியா குரூரப்பிண்டமே!
பிறவுயிர் பறிக்கவென்றேதான் பிறந்தாயோ?
இனந்தெரியாதவென்றுமுனை விளிப்பதோ?
இனந்தெரிந்தவனே நீ!
'இனம்' தெரிந்துதானே கொல்கிறாய்?


கறுப்பு மையிட்ட வெண்தாள்கள் பல
என் படம் கொண்டு பசையிட்டு ஒட்டப்பட;
வான் பார்த்தோரொலிபெருக்கி
வாசித்தென் பெயர் கூற;
எரிந்து வெடிக்கும் பட்டாசு
எமலோகத்துக்கென் வருகை சொல்ல;
அன்னை தந்தை அரற்றியழ;
சொந்தமெலாம் சோகம் கொள்ள;
நண்பர் நால்வரென் உடல் தாங்கிச்சுமக்க,
நீயோ...
'கொலைக்கூலி' கொண்டு
குடித்துக் கூத்திட்டுக் கும்மாளமுமடி!


நில்!
என்னுயிர் கொன்ற பின்
என் பிணத்தை மட்டுமேன் விட்டுச் சென்றாய்?
வா!
கொன்றவனே, கொண்டும் செல் என்னை.
கண்டதுண்டமிட்டு என்னுடலை
கறியாக்கி உணவாய்க் கொள்!
உன் வெறிக்கு, உருசியாய்த்தான் நானிருப்பேன்!!


கேள்!
மீண்டுமென் ஆன்மா கருக்கொள்ளும்.
அப்போதுமென்னை அழிப்பாயெனில்,
சொல்!
ஆர்ட்டிக்கில் நீ பிறந்தால்,
அந்தாட்டிக்காவில் நான் பிறக்க,
ஆண்டவன் அருளட்டும்.
அங்கும் தேடி வந்தென்னை அழிப்பாயெனில்,
உறுதியாய்ச் சொல்!
அரைப்பிடி மண்ணாகவேனும் அவதரித்து,
அரைவாழ்வில் அழிக்கப்படாமல்,
அப்போதேனும் 'முழுவாழ்வு' கொள்ள வேண்டும்!

Tuesday, April 17, 2012

அவசர காலச்சட்ட நீக்கமும்; அசைலம் (Asylum) அடிப்பதற்கான ஏக்கமும் !




இருப்பு உறுதியெண்டு இறுமாப்புக் கொள்ள,
இறுக்கச் சட்டங்கள் இளகிப்போக வேண்டும்.
அப்பளமோ அவையெல்லாம் அரை மணியில் இளகிப்போக?

சட்டமாற்றங்கள் சட்டமெனவே மாறி
கோடு கிழித்துக் கோடி றூல்ஸ் போடும்!

பேர்ஸ் கொஞ்சம் பெரிசெண்டாலும் - இங்கத்தயப்
பெட்டையொண்டு தேடிப்பிடிச்சு PR எடுக்கலாம்.
பேர்சே இல்லையெண்டானபின் பெரிசுக்கெங்கே போறதெண்டு
கொஞ்சமாய் யோசித்து கொதியும் பிடிக்கும் மண்டை
குறுக்கு வழியோடியாங்கே 'அசைலம்' பற்றி அசைபோடும்

தடுக்கி விழுந்த காயம் காட்டி தற்கொலைப்படை பாய்ஞ்சதெண்டும்;
கல்லுப்பட்ட காயமெல்லாம் செல்லுப்பட்டே வந்ததெண்டும்;
கால் வைக்குமிடமெல்லாம் கண்ணிவெடி;
கடவுளே எண்டு தப்பினாலும் ஆமிட அடி!
எண்டெல்லாம் அளந்து விட்ட காலம் போய்,

தற்கொலைப்படை பாய்ஞ்சா தலை வரைக்கும் தெறிக்குமெண்டும்;
செல்லுப் பீசுப்பட்டால் பல்லுப் பீசும் மிஞ்சாதெண்டும்,
அடிபாட்டுப் போட்டோக்கள் பார்த்து ஆங்கிலேயன் அலேர்ட் என்றானபின்
அவன் காதில் சுற்றுமொரு பூதான் அகிலத்திலுண்டோ மக்காள்?

தந்திரத் தமிழன்தன் எந்திரப்புத்தி
முட்டையிலும் முளைத்ததென்றோர் முடி பிடுங்கிக் காட்டும்!
ஆழ்கடலில் அலைவோனுக்கு அமிர்தம் போலொரு துரும்பாய்,
'அவசரகாலம்'

அங்கே நான் போனால்,
அவசரகாலத்தில் சிக்கி என் காலம் அகாலமாகுமென்று
ஆயிரமாயிரம் படங்களோட்டி,
'இங்கேயே இரு' என்றோர் இனிப்பான வார்த்தையுடனே
இருப்பிடப் பதிவும் பெற்று - இப்படி
ஆண்டுகள் கொஞ்சமாய் 'அசைலம்' அடிச்சுத்தந்த
அவசர காலமும் அல்லையிலே போச்சென்றான பிறகு,
இருக்கிற மூளையை வறுத்தெடுத்தெண்டாலும் வழியொண்டு தேடோணும்!

ஆ...ஆ.....
அன்னை மண்ணுக்குக் கோல் அடிச்சு
அரேஞ்ச்மண்ட் கொஞ்சம் செய்யலாம்!

எங்காச்சும் கொடி பிடிச்சுக் கோஷம் போட்ட போட்டோக்கள்;
சுருண்டு கிடக்கும் பேப்பர்களிலிருக்கும் இருண்ட யுகத்து நியூசுகள்;
காக்கிச் சட்டைக்காரன் கையில் காசு கொஞ்சம் ஊட்டியேனும்,
கைதாகிக் கம்பியெண்ணிக் களியும் திண்டேனென்றொரு கடுதாசி.
இவைகளும் இன்ன பலவும் தேடி - மேலும்
அச்சுறுத்தலும்
ஆட்கடத்தலும்;
உயிர்ப்பயமும்
ஊமைக்குத்துக்களும்;
கிறீஸ் பூதங்களும்
கீறல் காயங்களுமெண்டு
உப கதைகளும் கொஞ்சம் கொண்டு,
கல்வி விசா காலாவதியாகுமுன் கவர்மெண்டைக் கம்ப்ரமைஸ் ஆக்கோணும்!

பாசுப்போட்டுடனும், பவுண் போன்ற பேப்பர்களுடனும்
இளிச்சுக் கொண்டு கிடக்கும் இமிக்கிரேசன் வாசற்படி மிதிக்குமொரு நாள் வரும்.
ஈற்றில்,
வெள்ளைக்காரனவன் விளக்கி விசாரித்தாங்கே அடிப்பது,
"அசைலமாயிருக்கும்!"
அன்றேல்,
அடியேனுக்கு அஃது ஆழப்பாயுமோர் "ஆப்பாகத்தானிருக்கும்!!"